Friday, October 7, 2011

கூந்தலின் கடைசித் நீர்துளி - LAST DROP OF WATER

எத்தனை முறை துவட்டினாலும் நீங்காமல் - கூந்தலூடே ஊடுருவி வரும் கடைசி நீர் துளி போல அவள் நினைவுகள் என்னிலிருந்து அகல இயலவில்லை . மித ஈரமான கூந்தலும் - அதனால் நனைந்த தாவணியுமாய் அவள் கோலமிடும் அழகை அந்த மார்கழி பனியின் அதிகாலையில் காண, நான் பக்தி அவதாரமெடுத்து கோயிலுக்கு செல்ல ஆரம்பித்தேன் .

அவளை கடந்து செல்லும் நேரத்தை அதிகப்படுத்த நான் மெதுவாய் சைக்கிள் மிதிப்பதும் - நான் காண வேண்டி அவள் கோல கம்பிகளை நீட்டிப்பதும் உணர்ந்தேன் . நினைப்பதும் - உணர்வதும் காதலின் உந்து சக்திகள் அல்லவா ?

ஒரு வேளை பேசியிருந்தால் கூட இத்தனை சுவாரசியம் கிடைத்திருக்குமோ தெரியாது , எங்கள் இருவரிடையே கலையாத மௌனம் காத்திருந்ததுதான் சுவாரசியம் .

அவள் குத்துகாலிட்டு கோலம் இடும்போது , அந்த கால் கொலுசுக்கும் , ஆடைக்கும் இடையே விரசமில்லாமல் மின்னும் அவள் காலழகும் ; கோலமிட்டு முடித்து , வீட்டுக்குள் போகுமுன் தான் இட்ட கோலத்தை ஒரு கணம் தானே திரும்பி ரசித்துவிட்டு, என்னையும் காணும் ஒரு கண பார்வையும் , போதும் எனக்கு , எதிர் காற்றில் சைக்கிள் வேகமாய் செல்லும் .

அதிகாலை பனி - கோயில் மணி ஒசை - கனத்த மௌனம் இவையெல்லாம் சொல்லாத காதலின் சுகமான முகவரிகள் .

" அப்பா ..... தலையை நல்ல துவட்டிட்டேனா பாருப்பா " மகளின் குரல் கேட்ட பின்புதான் சுய நினைவுக்கு வந்தேன் . சொல்லாத காதலின் விரசமில்லா உணர்வுகள் எல்லாம் மகளின் பாசத்தில்தான் பரிணாமம் ஆகும் . அந்த கடைசி துளியை அகற்ற யாராலும் இயலவில்லை


No comments:

Post a Comment